ஒரு சின்ன ஏமாற்றம்
விளக்கிக் கொடுக்கும்
ரூபத்தில்
உணர்வு அற்று
உயிர் நெளிகிறது

முரண்பாடுகளை
முன்னுக்குத் தள்ளும்
பிரிவின் மேல்
தானாகவே வந்தமர்கிறது
காரணம்

காரணம்
அமர
கிளை அசைகிறது

அசைவதைப் பற்றும் மனம்
அடைவதன் இலக்கறிய
விலக்கிப் பார்க்கிற வேரில்
தந்த சொல்
தன்னில் வளர்த்தெடுத்துக் கொண்ட
நம்பிக்கையென்பது
அர்த்தமல்ல
ஆழம்

ஆழம்
அறிந்து கைக்கொள்ளும்
ஆயுதம்

தாமாக நிகழ்வதில்லை
எதுவும்
அமர்ந்து சென்றதில் அமைதியாய்
இருப்பதில்லை
எந்தவொரு அசைவும்

ஏமாற்றம்
சிறகுகளை விட்டுச் செல்ல
காற்று
நிகழ்த்திப் பார்க்கிறது
ரூபங்களை

- ரேவா

Pin It