வரிசையில் நிற்பவர்
அதட்டியபோதும்
சிட்டுவென துள்ளியாடினாள்...
பூங்காவின்
இரும்புவட ஊஞ்சலில்

மாவின் தடித்த கிளைநுனியில்
தூக்கணாங்குருவியென
தாளூன்றி எம்பியாடினாள்...
போதுமென்று தாயார்
மிரட்டியபோதும்

மஞ்ஞையின் நீள்வால்போல்
தாவணி உலைய,
பிணைத்த
ஆலவிழுதில் ஆடினாள்...
தோழியர் கெஞ்சியபோதும்
இறங்காமல்

நிறைவேறாக் கனவை
மனதாலும்,
தூக்கிக் கட்டப்பட்டு
தூசு படியத் தொங்கும்
நாலடி தேக்கு ஊஞ்சலை
விரல்களாலும்,
வருடியபடி
இல்லம் திரும்புவர்களுக்காக
காத்திருக்கிறாள்
தன் தனிமைக் கருவறையில்

- கா.சிவா

Pin It