இந்த
காலம்
பொல்லாதது
என் ப்ரியரக்ஷா!

காலம்
பருவம் தப்பிய
மழையென
என் நிலத்தில்
உனைச் சேர்த்தது..

யாருமற்ற
குளத்தாங்கரை
மௌனம் போல்
நானிருந்த வேளையில்
என் வேர் நனைத்த
நீரெனவே
காலம் உனை கைகாட்டியது...

தொலைத்து விட்டதாக
உன் மீது
ஒரு போதும்
புகாரில்லை!

தொலைந்து விட்டதைப்
போலான
தவிப்பை தவிர்க்கயியலவில்லை!

காலம்
கடத்திச் சென்ற
யாதொன்றும்
கைசேர்ந்ததில்லையாம்...
கையிலிருப்பதை
பிடுங்கி
விளையாட்டுக் காட்டும்
காற்றென காலம் இருக்கிறது!

சட்டென
நிகழ்வில் இருந்து
விலகி
நினைவில் அழிவதே
காலம் தந்த பரிசு!

நினைவின் பிடியில்
நின்று உழல்வதை விட
கால நதியோட்டத்தில்
கசடைப் போல்
கடந்து போகச் சொல்கிறாய்
என் ப்ரியரக்ஷா!

காலம்
காயமாற்றுமா?
காலம்
தேற்றித் தூக்குமா?
யாதொன்றும்
அறியாதிருக்கையிலும்
உன்னைத் தேடும்
மனது ஓயாது அரற்றும்...

- இசைமலர்

Pin It