விழும் வரை காத்திருக்கிறேன்
அல்லது
அது விழாத வரை கூட இருக்கலாம்
அத்தனை பெரிய மரத்தில்
ஒரே ஒரு பூவில்
பார்வையால் தங்கி இருக்கிறேன்
மற்றபடி பறவையாய்
பறந்து போவது பற்றியெல்லாம்
மரத்துக்கும் தெரியாது எனக்கும் தெரியாது....

*

வாசலில் எல்லாரும் கை நீட்டுகிறார்கள்
மனம் கசந்த கடவுள் தன்னை கண்டந்துண்டமாக
வெட்டி தட்டுகளில் போட்டு விட்டு
அரூபமாய் கருவறையில் அமர்கிறார்
அன்று முழுக்க அவர் வேண்டியதெல்லாம்
தான் ஜீரணமாக வேண்டும் என்பது தான்...

*

நின்று கவனிக்க ஆரம்பித்தேன்
கெட்ட வார்த்தைகளை
வக்கிரத்தோடு பேசிக் கொண்டிருந்த
பைத்தியக்காரன்
பேசுவதை மெல்ல மெல்ல
குறைத்துக் கொண்டான்....

- கவிஜி

Pin It