000

காயங்களிலிருந்து
விடுபடமுன்னர்
காணாமல் போனவர்கள்
நிலத்தின் பெரிய வடுவோடு பட்டியலிடப்பட்டார்கள்
தொலைந்தவர்கள் என்பதைவிட தொலைக்கப்பட்டவர்கள்
ஒரே தாவலில் வேட்டையாடப்பட்டவர்கள்
வருடக்கணக்காக கணக்கில் வேகவைத்துக் கொல்லப்பட்டார்கள்
கறுப்பு வெள்ளை
சுவரொட்டிகள் ஒட்டக்கூட நாதியற்றவர்கள் கருப்பைகளின்
கண்ணீர்த் திடலில் வண்ணங்களைக் கரைக்கிறார்கள்
கழுத்து வரை நெரிக்கப்பட்ட சுதந்திரத்தை
கைகளில் தூக்கிப் பிடித்தவாறு
தாய்கள் சமாதியாகிறார்கள்
யாருக்கும்
சுடச்சுட வாய்க்கும் வேட்டுக்களில்
திணறிய தலைகளை புதிய நிலத்தை
ஆண்டவர்கள் எனப்படுவோர்
கொய்து கொண்டு போனார்கள்
சட்டமிடப்பட்ட சித்திரங்களோடு
கடைசி நெருப்பின் பிழம்போடு காத்திருக்கிறார்கள் தாய்மார்கள்
குற்றப்பத்திரிகையை
கழுத்துக்குக் கீழே தொங்கவிட்டபடி
அடுத்த தேர்தல் தயாராகிறது
காடாகிப் போன மணலாறும்
ஊற்றுக்குழி விழுந்த கன்னியாவும்
இனி காணாமல் போகும்

 

000

எந்த ராட்சத கணங்களும் திரட்சி கொள்வதில்லை
அகலேற்றும் விரல்களை பற்றிக் கொள்கிறேன்
இருள் பொதிந்த கடல்
தன்னை அலைக்கழித்து
கரைபுரண்டு மிக அழகாய்
நிலத்தை எழுப்புகிறது
அதேபோல்
ஓராயிரம் முறை முயற்சி செய்து
மனத் தற்கொலையில் இருந்து
தப்பித்துக் கொள்கிறேன்
நாளொன்றுக்கு மூன்றுமுறை
நம்பிக்கை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள்
வித்தைக்காரர்கள்
தாழ்ந்த கூரையில் இருந்து
துளித்துளியாய்
சொட்டிக் கொண்டிருந்தது
நம்மைக் கைது செய்து வைத்திருக்கும் செவிகள்

சிறையைக் கடந்த நதி
இரண்டாவது முறை
திரும்ப வருவதே இல்லை

000

தாய்மைச் செடிகளைப் பார்த்திருக்கிறீர்களா
அவை ஒற்றையடிப் பாதையில் அசைவதைக் கேட்டிருக்கிறீர்களா
வெதுவெதுப்பான பாறைகள் எந்த சேதாரமும் அற்று கரைந்து விடுகின்றன
மற்றைய விரல்களைவிட
சுட்டுவிரல்கள் எப்போதும் துடிதுடிப்பானவை
இப்படித்தான் அவரவர் திசையில் அவரவர் காட்டிகள் திரும்பி நிற்கின்றன
எந்த சாகசமும் இல்லை
தந்திரமாகக் காம்பை விட்டு
பூவைக் கொய்வது
அது இன்னும் சில நேரங்களில் தானாகவே கழன்று விடுகிறது

- தமிழ் உதயா, லண்டன்

Pin It