நிலத்தை
வளைத்து விடு.
வனத்தை வசமாக்கு.
சிவநடனம் புரி.

ஜெய்ஸ்ரீராம் கூறு
ராமரின் பெயரால்
ராஜ்ஜியம் நடத்து.

இயற்கை வளத்தைக்
கொள்ளையடி.
பன்னாட்டு முதலாளிக்கு
தேசத்தைப் பங்கு வை.

மாட்டைப் புனிதமாக்கு
மனிதனைத் தீட்டாக்கு.
அல்லாவின் பெயர் சொன்னால்
அடித்து கொலை செய்.

மண்ணின் மைந்தர்களைத்
துப்பாக்கி முனையில் துரத்து.

எதிர்த்து நிற்பவனை
அடித்து பைத்தியமாக்கு.
அல்லது பிணமாக்கு.

போராடுபவனை
அந்நிய நாட்டுக்கைக்கூலி என்று அறிவித்து விடு.

எதற்கும் ஒத்துவரவில்லையென்றால்
தேசத்துரோகி என்று தூக்கிலிடு.

ஜனநாயகம் பற்றி
சற்றும் கவலைப்படாதே.

இருக்கவே இருக்கிறது
வாக்காளர்கள் விருப்பத்தை
எண்ணிக்கையில் காட்டாத
வாக்குப்பதிவு எந்திரம்.

அது தான்
மக்களாட்சியின்
மூச்சுக்குழலை
முற்றுகையிட வந்த
ஜீவசமாதி.

தேசபக்தியின்
வண்ணங்கள் பூசப்பட்ட
ஜனநாயகத்தின்
கடைசி கல்லறை.

- அமீர் அப்பாஸ்

Pin It