கீற்றில் தேட...

man 247சித்தப்பா பாரம்பரியமானவர்...
ஏறு தழுவி
மஞ்சு விரட்டி
இளவட்டக் கல் தூக்கி
சித்தியை கை பிடித்தவர்.

திண்ணையில் அமர்ந்தபடி
மணிக்கணக்கில் பேசுவார்...

எந்தையும் உந்தையும்
எம்முறை கேளீர்
என்ற தங்கை
ஓடுகாலியாகிப்போனாள்....

கல்லூரி
மாணவன் தலைவனாய் தம்பி
துணங்கை கூத்தாடியபடி
உதவாக்கரை ஆகிப்போனான்....

செங்கோல் களவு போனபின்
சித்தப்பா உருவியது போக
மிச்சமிருந்த
சித்தியின் சிலம்பும்
மாணிக்கப் பரல்களும்
தெறிக்கவேயில்லை
டிஜிட்டல் இந்தியாவில்...

வீட்டுக்குள்ளே முடங்கியபடி
சித்தி....

பாரம்பரியம் பேசியபடி
சொச்சமிருந்த
வாழ் நாளை கழித்திருந்தார்
சித்தப்பா
மாதவி வீட்டு திண்ணையில்.....

- அ.ப.சிவா