முன்னது போலான
மாயைகளை வாசிக்கத் தொடங்கிற்று
காலப் புல்லாங்குழல்

எப்போதையும் போல்
கடிய இசையை
காதுக்குள் காய்ச்சி ஊற்றி
எனக்குள் ஒரு துயரப்பாடலை
இப்பவும் இசைத்தபடிதான்
மொழி பிரிக்கிறது

எழில்மிகு மலைகளும்
இரசனைமிகு ஏரிகளும்
சமீபித்தபடி
கண்கள் வழியாகத்தான்
கடந்து போகின்றன

கனவுகளின் உச்ச நிலையில்
மனதை அழைத்துச் செல்லும்
எக்காட்சியும் சுயத்துக்குள்
அடங்குவதில்லை என்று தெளிகையில்
அசையாததென என்னை வசீகரித்த எல்லாம்
ஆழிக்குள் அடங்குகிறது

பட்டோலையை கொண்டு வாருங்கள்
இப்போதே எழுதி வைக்கிறேன்
பூமியின் பாடையில்
வெண்ணூலுமற்ற வெற்றுடலாய்
கரைதலை நோக்கி வாழ்வு
மீன்களின் இரையாய்
கடலுக்குள் இடம் பெயர்வதற்குள்!

- ரோஷான் ஏ.ஜிப்ரி

Pin It