கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்,
தொல்லது விழைந்தென நிலம்வளம் கரப்பினும்,
எல்லலா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை;
வினைஞர் அரசு வீழ்ந்ததே முடிவென
முனையா திருப்பின் புவிவெப்ப உயர்வால்
உலகம் அழிவதைத் தடுத்திடும் வழியின்றி
பலவகை யாலும் உயிரினம் அழியுமே

(கழிந்த காலத்துப் பெய்தேன்; இந்நாளிற் பெய்யேன், என மழை மாறினாலும், 'முற்காலத்து விளைந்தேன், இனி விளையேன்' என நிலம் விளைவு ஒழிந்தாலும் உயிர்கள் வாழாது மடியும் அன்றோ? (அது போல) தொழிலாளர்களின் (சோஷலிச) அரசு வீழ்ந்த பின் அதுவே முடிவு என்று நினைத்து (மீண்டும் அதை அமைக்க) முயற்சி செய்யாமல் இருந்தால் (புவி வெப்பத்தை உயர்த்தும் பொருட்களையே உற்பத்தி செய்ய வற்புறுத்தும் முதலாளித்துவப் பொருளாதார விதிகளால்) இப்புவியின் வெப்பம் உயர்ந்து உலகம் அழிவதைத் தடுக்கும் வழியின்றி, (பனி மலை உருகுதல், நீர்நிலைகள் அமிலமயமாதல் என்று) பலவகையிலும் உயிரினங்கள் அழிந்து விடுமே!)

- இராமியா

Pin It