சந்தை விதிகள் ஆளும் உலகில்
தந்திரச் செயலும் மூல தனமும்
சிறப்புக் குரிய அலகாய் அமைவதால்
அறவோர் மறவோர் யாவரும் தமக்கென
உடைமை குவித்துப் பிறரைத் தடுப்பதின்
விளைவாய் மனிதர் தேவையைப் பெறாரே
வினைஞர் ஆட்சி செய்யுங் காலை
அனைவர்க்கும் பொதுவாய் அனைத்தும் இருப்பதும்
நற்செயல் அளவே நற்பெயர் பெறுவதன்
உற்ற அலகாய் அமைவதி னாலும்
வேண்டிய பொருளை வேண்டிய காலம்
வேண்டும் அளவில் துய்த்திட இயலுமே
(இவ்வுலகைச் சந்தை விதிகள் ஆளும் பொழுது தந்திரச் செயல்களும், மூலதனமுமே (மனிதர்களின்) சிறப்பை அளக்கும் அலகாக அமைவதால், மறத் தன்மை உடையவர்கள் மட்டுமல்லாது அறவோர்களும் (தங்களுக்கு என) உடைமைகள் குவிக்க வேண்டும் என்றும், பிறர் உடைமைகள் குவிப்பதைத் தடுக்க வேண்டும் என்றும் செயல்படும்படி வற்புறுத்தப் படுகிறார்கள். இதன் பயனாய் (மனித வளம் வீணாகி) மனிதர்கள் தங்கள் தேவையைப் பெற முடியாமல் போய்விடுகிறது. (ஆனால்) தொழிலாளர்களின் (சோஷலிச) ஆட்சி நடைபெறும் பொழுது அனைத்தும் அனைவருக்கும் பொதுவாய் இருப்பதும், ஒவ்வொருவரும் செய்யும் நற்செயல்களின் அளவிலேயே அவர்கள் நற்பெயர்களைப் பெறுவதற்கான அலகாக அமைவதும், (மனிதர்கள் தங்களுக்கு) வேண்டிய பொருட்களை, வேண்டிய நேரத்தில் வேண்டிய அளவில் அனுபவிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.)
- இராமியா