அடித்து ஊற்றும் மழை நேரத்தில்
கொஞ்சமும் வெட்கமின்றி
உடலை மட்டுமே நேசித்த தருணமொன்று
அபஸ்வரம் மீட்டுகிறது
எனக்கான பிரத்யேக சாபத்துடன்
விடிய காத்திருக்கிறது அதிகாலை
பழுத்த கொய்யாக்களின் சேதியை
அணிலிடம் மட்டுமே பகிர்கின்றன மரங்கள்
கனிக்காக நீண்ட கைகளில்
எச்சமிட்ட காக்கை ஒன்று
படபடக்க வைத்தபடி பறக்கிறது
சேர்ந்து விட்ட சாபங்களின் விமோசனத்திற்கான
விளக்கொன்றை ஏற்றி வைத்து விட்டு
வரங்கள் அடர்ந்த வனமொன்றில்
என் உயிரின் வேரை
எங்காவது ஊன்ற வேண்டும்.
கீற்றில் தேட...
உயிரின் வேர்கள்
- விவரங்கள்
- பத்மாகிரஹம்
- பிரிவு: கவிதைகள்