நீ எனக்கு முதன் முதலில் வழங்கிய முத்தம்
பில்டர் காபியின் வாசம் சுமந்திருந்தது
நம் இனிய வாழ்வுக்கான தொடக்கப்புள்ளி ஒன்று
வாசமாய் வைக்கப்பட்டது
அப்போதெல்லாம்
நம் பரம்பரைக்கான
வித்தொன்றின் தேடலுக்காய்
தேவதை கதைகளில் வரும் தேவதை ஒன்றிற்கு
இரட்டைப்பின்னலுடன்
பாவாடை சட்டை மாட்டி விட்டிருந்தோம்
மடி சேர்ந்த தேவதை
இறக்கை சுழட்டிவிட்டு
தொட்டிலில் தூங்கிக்கொண்டிருக்கிறது
இப்போதெல்லாம்
உனது அவசர முத்தங்களை
எனக்குள் கோர்ப்பதில்லை நான்
ஈரம் கூட பதியாமல் அவை
வறண்டிருப்பதால்
அந்த உனது முதல் இதழளிப்பையே
இன்னும் சுமந்து கொண்டிருக்கிறேன்
அது சிறிது சிறிதாய் இறங்கிக்கொண்டிருக்கிறது
என் தொண்டைக்குள்
நிறைய இனிப்புடனும்
துளி கசப்புடனும்,
வாழ்வு மணக்கிறது பில்டரில்
கொதிக்கும் காபியாய்.
- பத்மாகிரஹம்