கீற்றில் தேட...

சூழ்நிலைக் கேடும் புவிவெப்ப உயர்வும்
பாழ்நிலை யாக்கி உலகில் உயிரினம்
இல்லா தொழிக்கும் பயணம் தன்னைச்
செல்வழி தடுக்க நல்வழி தேடித்
தவித்து நிற்கும் அறிஞர் குழாமே
புவிவெப்ப உயர்வுப் பணடம் தன்னைப்
படைக்கா திருக்கவும் உயிர்வளி அளித்துக்
கொடையாய்ப் புவியைக் குளிரச் செய்யும்
வேளாண் செயலையும் மரம்வளர்த் தலையும்
தாளாது செய்யும் வலிமை மிகுந்த
சமதர்ம அமைப்பே வழியென அறிவீர்

(சூழ்நிலைக் கேடும் புவி வெப்ப உயர்வும், உலகில் உயிரினம் இல்லாது ஒழிக்கும் படியான, பாழ்நிலையை உருவாக்கிக் கொண்டு செல்லும் வழியைத் தடுத்து, (இக்கேடுகளில் இருந்து உலகைக் காக்கும்) நல்ல வழியைத் தேடித் தவித்து நிற்கும் அறிஞர்களே! புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் (ஆயுதங்கள், வாகனங்கள் போன்ற) பண்டங்களைப் படைக்காமல் இருக்கவும், உயிர் வளியை அளித்து, அதனால் புவியைக் குளிர்விக்கக் கூடிய வேளாண்மையையும், மரம் வளர்த்தலையும் தடையின்றி செயல்படுத்தக் கூடிய, வலிமை மிகுந்த சோஷலிச அமைப்பு ஒன்றே வழி என்று அறிவீர்களாக.)

- இராமியா