கீற்றில் தேட...

monkeys

மலைச் சாலையோரத்தில்
தன்னியல்பு தொலைத்து
கைநீட்டி நிற்கிறது.....

கடந்து செல்லும் வாகனத்திலிருந்து
வீசியெறியப்படும்
பழங்களை கவ்வி
புசிக்கிறது.

தாயை
பார்த்து
பழகிய குட்டி-அதுவும்
தன்னியல்பு தொலைத்து
கைநீட்டி நிற்கிறது.

வேகமாய்
கடந்த வாகனத்திற்கிடையே
லாவகம் தெரியாது
கைநீட்டி
சக்கரத்தில் சிக்கி
நசுங்கி
துடிதுடித்து குருதி வழிய
செத்தது குட்டி.

நசுங்கிய குட்டியை
கண்ணீரோடு
வாரியெடுத்து
தடவிப்பார்கிறது
தாய்.

கடந்த செல்லும் வாகனத்திலிருந்து
வீசியெறிப்பட்ட
பழம்
ரத்தம் பட்டு
தெறித்து விழுகிறது.

ஆகப்பெரிய
காரியம் செய்த மிதப்பில் நம்
பயணம் நீள்கிறது.

- அ.கரீம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)