உன்னையும் என்னையும் பிரித்த சொல்
இங்கேதான் பிறந்தது
சொல்லில் வஞ்சகம் சூது நிரப்பியவர்கள்
சொற்களை இங்கேதான் விட்டுப் போயிருக்கிறார்கள்
சொல்லில்
மனிதம் துளைக்கும் வண்டுகள் ஒளிந்திருந்தன
உறுப்புகளை அறுத்தெறியும் ஆயுதங்கள் இருந்தன
நொடிப்பொழுதில் மயக்கமடையச் செய்யும்
விஷக் கிருமிகளிருந்தன
யாரையும் இரண்டாக கிழிக்கும் பிளவு நாக்குகளிருந்தன
சில நூற்றாண்டுவரை
சில சொற்களை உச்சரிக்க சிலருக்கு அனுமதியில்லை
சோற்றுப் பருக்கைகள்
காக்கைகளுக்கு போடுவதைப்போல
அவர்களுக்கு சொற்கள் வீசியெறியப்பட்டன
ரகசியமாக உச்சரித்த நாவுகள் அறுத்தெரியப்பட்டன
ஈயக் கொப்பரைகள் காதுகளுக்காக காத்துக்கிடந்தன
மந்திர சொற்களை தின்று செறிக்கும் சிலைகள்
கண்கள் மூடிக்கிடந்தன
தவளைச் சொற்களை பாம்புச் சொல் விழுங்குகிறது
பிழையாக எழுதப்பட்ட சொல்
பிழையென்று சொல்லிக்கொண்டதில்லை
மஞ்சள் புத்தகத்தில் உறங்கும் சொல்லுக்கும்
புனித நூல்களில் உறங்கும் சொல்லுக்கும் பேதமில்லை
மண்டைக்குள் அலையும் சாத்தான்களின்
கிறுக்கல்கள் சொல்லின் வாலில் தீயைப் பற்ற வைக்கின்றன
வழக்கொழிந்த சொற்கள்
புதுப்புது கட்சிக்கொடிகளின் வழியேறி
புறாக்கள் பறக்கும் நிலத்தில் சாயங்களை கலக்கின்றன
இப்படித்தான் உலகின் ஒரு பகுதி சொல்லால்
பிரிந்து போனது
அது இன்னும் பிரிந்துக்கொண்டிருக்கிறது.
புது சொற்கள் புதிய புதிய உலகங்களை
இணைத்து உருவாக்கித் தருகின்றன
சொற்கள் மிதக்கும்
உலகத்தில்தான் நீயும் நானும் இருக்கிறோம்
- கோசின்ரா