கீற்றில் தேட...

பசியோடிருந்தான்
தலை வெட்டும் தேசத்திலிருந்து வந்தவன்
அவனுக்கு தலை வெட்டுவதை விட
வேறெதுவும் தெரியாது
கழுத்துக்கு கயிறு இறுக்கும் தேசத்தில்
தலை வெட்டும் வேலைக்கு ஆளெடுப்பதில்லை
சவுக்கடி கொடுக்கும் வேலை அல்லது
கற்களால் அடித்து கொல்லும் வேலையாவது
கொடுங்களென்றான்
எல்லா சித்தரவதைகளும் நடக்கும் நாடுதான்
வெளியாட்களை எடுப்பதில்லை
உள்ளூர் ரவுடி அவன் மேல் பரிதாப்பட்டு அழைத்தான்
நிறைய தலை வெட்டும் வேலை தருவதாக
அவன் சொன்னான் தலை வெட்டும் உத்தரவில்
அரசாங்க முத்திரை இருக்க வேண்டும்
ஒத்துவராதென்று அவனைக் கடந்தான் ரவுடி
இவன் தலையை சீக்கிரம்
எடுத்துவிட வேண்டுமென்று நினைத்துக்கொண்டு
ஒரு செய்தியைப் படித்ததிலிருந்து
அவனுக்கு கண்களைப் பிடுங்கி எரியும்
சித்ரவதையை கற்றுக்கொள்ள ஆசை வந்தது
குதத்தின் வழியாக பீர் பாட்டிலை சொருகும் ஆசையும்
அவன் எதற்கும் தயராக இருந்தான்
சித்ரவதை ஒரு கலையென்றான்
அதில் தான் சிறந்த கலைஞன் என்றான்
அவனை குறைச் சொல்லிக்கொண்டு ஒரு கூட்டம் எழுந்தது
அவன் நம்பிக்கையை குறை சொல்லாதீர்கள்
அப்படி கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது
அவன் எதையும் ஆகாயத்திலிருந்து கற்றிருக்கப் போவதில்லை
பூமியில்தான் எங்கேயோ கற்றிருக்க வேண்டும்
சித்ரவதை கலையென்பதை சொல்லிக்கொண்டிருக்கட்டும்
அதை அவன் அனுபவிக்கும் வரை.

- கோசின்ரா