கீற்றில் தேட...

அவனுக்கு தலைதான் பிரச்சனை
அடிக்கடி கழண்டுவிடும்
யாரவது தலை எங்கே என்று கேட்கும்போதுதான்
தேடத் தொடங்குவான்
ஒருமுறை எங்கு தேடியும் கிடைக்கவில்லை
அடுத்தநாள் செய்தித்தாள் பார்த்து தெரிந்துகொண்டான்
ஒருபெண் புகார் கொடுத்திருந்தாள்
ஒருதலை தன்னை இரவிலிருந்து பின்தொடர்வதாக
எவ்வளவு துரத்தியும் படுக்கையறைவரை வந்துவிட்டதாகவும்
அவனுக்கு குழப்பமாக இருந்தது
பெண்களின் படுக்கையறைக்குள் அனுமதியின்றி
நுழைவதை எதிர்ப்பவனுக்கு
இப்படியொரு தலை வாய்த்திருக்கிறது
தலையைப் பூட்டிவைக்கச் சொல்லியும்
சங்கிலியிடச் சொல்லியும் அறிவுரைகள் வந்தன
தலையைக் கையாள்வது கடினம்
அதற்குப் பேசத்தெரியும்
தெருவில் வந்து எதிர்க் கூச்சலிடுகிறது
மேல்சட்டையில்லாத தேசம்
கடந்து செல்லும் போது,
பசியால் சுருண்டு விழுந்த தேசம்
தாகத்திற்காய் அலையும் போது...
பொறுப்பை தட்டிக்கழித்தவன்
ஆடம்பரமாக உலா வரும்போது...
அச்சமின்மையை அணியாமல்
தப்பித்தலை அணிந்து கொண்டபோது...
அழுகை வலி வன்மம்
ஒவ்வொரு மனிதனையும் தின்னும் போது...
தலை காணாமல் போய்விடுகிறது
தலையில்லாதவன் என்ற அடையாளம் கிடைத்தபின்
தலை தேவையில்லைதான்
இருப்பினும்
அவன்தான் அவன் என்பதற்கான சாட்சிகளை 
தலைக்குள்தான் வைத்திருக்கின்றான்
வழியில்  பார்த்தால் தொடர்பு கொள்ளுங்கள்
ஒரு போதும் அனுமதியின்றி
அவன் தலையை திறக்காதீர்கள்
அயலவன் திறக்கும்போது
அது வெடிகுண்டாக மாறிவிடலாம்

- கோசின்ரா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)