துரோகங்களின் கூர்வாளை
புன்னகையில் மறைப்பவர்கள்
முகத்திற்கு முன்னின்று
போர் புரிவதில்லை..!

அன்பின்
நம்பிக்கைகளுக்கு
எதிரானவர்கள்
சொற்களை
விஷத்தில் ஊற வைத்து
செவிகளுக்குப்
பருகத் தருகிறார்கள்..!

நண்பனைப்போன்ற
தோற்றத்தில் இருக்கும்
எதிரிகளை
ஒரு போதும் வீரத்தால்
வெல்ல முடிவதில்லை..!

காலம் என்கிற
வாழ்வின் மறுசுழற்சியில்
அவர்கள்
காணாமல் போவதில்லை..!

கண்களுக்கும்
இமைகளுக்குமான
இடைவெளியில்..
தூக்கத்தைப் போல
அவர்கள்
தொடர்ந்து வருகிறார்கள்..!

மனம் என்னும்
பாத்திரத்தில் நிரம்பாமல்
வெற்றிடத்தில் வசிக்கும்
காற்றைப்போல
காணாத போதும் அவர்கள்
நம்மில் கலந்திருக்கிறார்கள்..!

பாலத்திற்கு
அடியில் ஓடும்
நதிவெள்ளம் அல்ல
அவர்கள்..!

பாதையைக்
கடக்கத் தவறிய
தருணத்தில் நேர்ந்த
எதிர்பாராத விபத்துகள்..!

நட்சத்திரங்களில் இருள் பூசி
ஒளியை மறைத்து விட
நினைக்கும் அவர்கள்
பகலில் கண்மூடி..
இரவைக் கனவு காணும்
அறியாமையின்
பூனைக்குட்டிகள்..!

- அமீர் அப்பாஸ்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.