இசைப்பிரியாவின் துயரமான படுகொலைக்கு மற்றொரு சாட்சியம் வெளியிடப்பட்டுள்ள இந்த தருணத்தில் மரணச் செய்தி வெளி வந்த உடனேயே எழுதப்பட்ட ஒரு ஆங்கில கவிதையின் தமிழாக்கம் இதோ.
பலப்பல நோய்கள் பீடித்துள்ளன இவ்வுலகை
ஆனால் எதுவுமில்லை இதனினும் கொடிது
ஆம், பேச முடிந்தவர்களின் முரட்டு மௌனம்.
இதோ! பேசுகிறேன் நான்
உனக்காக; என் சகோதரியே!
என் தாயே! என் தோழியே!
என் சகோதரியே!
உன் பெயரில் இசை
உன் தியாகத்தின் இசை
மனோரமா, நிலோஃபர், ஃபுல்மோனி
போன்ற சகோதரிகளின்
தியாகத்தின் இசை
காலம் காலமாய் முழங்கும்
நம் போராட்டத்தின் பாடலை.
உறுதியளிக்கின்றேன் நான்,
உன் சகோதரன்
வார்த்தைகளை மட்டுமே
ஆயுதங்களாய் தரித்த
உன் பாவம் சகோதரன்.
என் தாயே!
கருவில் உன் குழந்தையை
கொன்றபோது
பிறந்த மகன் நான்.
தாயே! உன் மகன் நான்;
ஈழத்தாய்மார்களின் மகன் நான்;
பாலஸ்த்தீனத்தின், குருதிஸ்த்தானின்
தாய்மார்களின் மகன் நான்.
கேட்கப்படாத குரல்களுக்காக
வெளிப்படாத கோரங்களுக்காக
சொல்லப்படாத துயரங்களுக்காக
நீதி கேட்கும் மகன் நான்.
வார்த்தைகளை மட்டுமே
ஆயுதங்களாய் தரித்த
உன் பாவம் மகன்.
என் தோழியே!
நான் வாழ்வதாகச் சொல்லிக் கொள்கிறேன்
(வெட்கமின்றி)
நீ மரணத்தை தழுவிய இலக்கிற்காக,
துயரத்தை நாடும் மக்கள்;
அமைதியை நாடும் மண்;
அன்பை நாடும் உயிர்;
துயரத்தில் இன்று,
மரணத்தை நோக்கி.
உனக்கு நடந்ததை
பார்த்த என் கண்கள்
உதிர்த்தன வார்த்தைத் துளிகள்.
வார்த்தைகள்
வார்த்தைகளை மட்டுமே
ஆயுதங்களாய் தரித்த
உனது தோழன்.
ஓ! சுதந்திரப் புறாவே!
காமக் கழுகுகளால் குதறப்பட்டாய்.
ஓ! அமைதியின் மானே!
அதிகார நரிகளுக்கு இறையானாய்.
ஓ! நீதியின் தேவதையே!
ஓ! சுதந்திரத்தின் தாயே!
கிடக்கிறாள் நிர்வாணமாய் அங்கே
”ஆண்கள்” என்னும் ஜந்துக்களால்
அலைகழிக்கப்பட்டு.
சூறையாடப்பட்டது
உனது உடல் மட்டுமல்ல
லங்கா என்ற பொய்த்தோற்றமும்தான்
மீறப்பட்டது நீ மட்டுமல்ல
மானுடமே மானபங்கப்பட்டது.
பேசும் திராணியிருந்தும்
பேசாத மெளனிகளின்
மௌனம், மீண்டும் மீண்டும்
கற்பழிக்கப்பட்டது.
ஆனால் பேசுகிறேன் நான் இன்று
அழுகிறேன் இன்று
உன் உடன்பிறப்பு, உன் மகன்
உன் தோழன்
இன்று ஓரு மனிதனாய்.
நடைப்பிணமாய்.
வார்த்தைகளை மட்டுமே
ஆயுதங்களாய் தரித்தவனாய்
தற்போது.....
- கார்த்திக் ராமீராஸ்
-ஆங்கிலத்திலிருந்து தமிழில்: பொன்.சந்திரன்