கீற்றில் தேட...

மடியில் கிடத்தி
இப்போதும்
தலை கோதுகிறாள்
அம்மா
தன் செல்லப்
பிள்ளையென

குழந்‌தையென
உறங்குகிறேன் நான்

கைவிரல் பதியும்
அப்பாவின்
முரட்டு அடி
இப்போதும்
பயம் தான்

எப்போதும்
ஓரடி
தள்ளியே
நிற்கிறேன்

அன்பாய்
சொல்கையிலும்
அதட்டலாய்
தொனிக்கும்
பாட்டியின்
சொல்லை
இப்போதும்
மறுப்பதில்லை

பழுத்து
தழுத்த
போதும்
நரைத்த என்
தலைக்கு
பின்னிருந்‌து
கழுத்தைக்
கட்டிக்கொண்டு
தொங்கும்
என் பிள்ளை
பிறந்‌தது
நேற்றெனவே
தோன்றும்

ஆனால்
ஒரு நமட்டுச்
சிரிப்பில்
சட்டென உணர்த்தி
விடுகிறாள்
மனைவி
எனக்குக்
கழுதை
வயதாவதை

கழுதையின்
வயதென்னவோதான்
தெரிவதில்லை