கீற்றில் தேட...

போலி மோதல் படுகொலைகளில்
கொல்லப்படும் எவரும்
முதன் முறையாக
மரணிப்பவர்கள் இல்லை..!

அவர்கள் ஏற்கெனவே
அவதூறுகளால்..
கொல்லப் பட்டிருக்கிறார்கள்..!
தேசத் துரோகங்களால்
கொல்லப் பட்டிருக்கிறார்கள்..!

மன்னிக்கவே முடியாத
மாபாதகங்களால்..
கொல்லப் பட்டிருக்கிறார்கள்..!

பாலியல் வக்கிரங்களால்
நீக்காத பழிச்சொற்களால்
பல முறை கொல்லப் பட்டிருக்கிறார்கள்..!

கசியும் குருதிக்கறைகளால்
ஒரு போதும்
கரைந்து விடாத வண்ணம்
தங்கள் அமைப்புகளின்
பெயர்களையும்
நோக்கங்களையும்
எழுதி வைத்து விட்டுத் தான்
இறந்து போகிறார்கள்..!

முகம்
சிதைக்கப்பட்ட நிலையிலும்
அவர்கள் தங்களின்
அடையாள அட்டையை சிதைக்க
அனுமதிப்பதில்லை..!
 
அரச பயங்கரவாதத்தின்
அநீதிகளுக்கு எதிராக..
தன்னை ஒப்படைத்துக் கொண்ட
போராளிகள் என்பதைத் தவிர..
வேறொன்றும் அறிந்திடாத
அவர்கள்
உலகையே அச்சுறுத்திய..
பயங்கரவாதிகள் என்று
இன்றளவும் ஊடகங்களால்
நம்ப வைக்கப்படுகிறார்கள்..!