கீற்றில் தேட...

நான் நிர்கதியாய் நிற்பது பற்றிய
உங்களின் அனுதாபம்
தேவையில்லை
சகல சுதந்திரத்தோடும்
சமுத்திரமென   உணர்கிறேன்
இக்கணத்தில்

என் தனியான பயணங்களை
பற்றிய 
உங்களின் மொழிபெயர்ப்பு முழுக்கவே  பிழை  
ஆகாயம் முழுமையிலும்
நீண்டு விஸ்தரிக்கும்
பறவையின் சிறகெனது

யாருமில்லா தனியறையில்
நானுதிர்க்கும்
புன்னகை பற்றிய உங்களின்
அதிகபட்ச விமர்சனம்
பைத்தியக்காரன்....  
யாருமற்ற வனத்திலும்
மரங்கள் பூக்கின்றன
காட்டு மரங்களுக்கு
யாரொருவரும் தேவையில்லை

அருவியின் உடல் போல்
வீழும்
என் கண்ணீர் பற்றிய
உங்கள் குறிப்பெதுவும் வேண்டாம்
வீழவும்
பின் ஆர்ப்பரித்து எழும்பவும்
எனக்குத் தெரியும்
சற்று   தள்ளி நில்லுங்கள்

- க.உதயகுமார்(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)