மொட்டமலை மேய்ப்பனிடம்
பொட்டமண் சுட்டெரித்த பொழுதில்
துப்புவாங்கிய மதுராபுதூர் களவாணி
சாமத்தில் வானம் பார்த்து
விண்மீன் தேடி
நல்சகுனம் நாடி
கன்னம் வைக்கிறான்
கச்சிராய பாளையம் ராசா வீட்டில்
மணிமுடி முத்துமாலை வைர அட்டிகை
வைடூரிய அணிகலன் பொன்ஆபரணம் என
அனைத்தையும் விடுத்து அள்ளிப் போகிறான்
கோட்டை நெல்லை தொம்பையிலிருந்து
பொழுது விடியும் முன்பாய்
விரைகிறான் புகைக்கூண்டு வழியே
இன்றைய இரவில் நிலவொளியில்
பசியாறும் ஒரு பஞ்சக்கூட்டமும்
பகலில் குருவிக்கூட்டமும்.
- ஸ்ரீதர்பாரதி