குறைந்தபட்ச கருணையின் நிறத்திலொரு அன்பை
இறைஞ்சி நிற்பதில்
யாதொரு இழுக்கும் இல்லை
மீதமிருக்கும் வாழ்வின்
நகர்தலுக்கு
பின் நான் என்ன தான் செய்ய முடியும்
உங்கள் கைநழுவி உதிரும்
பிரியப் பருக்கைகளை
எனக்கே எனக்கான
கருணையென உண்டுயிர்க்கிறேன்
நீங்களே என் அருளாளர்கள்
உங்கள் கைகளை உயர்த்தினால் போதும்
ஆசீர்வாதமென நான் பற்றித்தழைக்கிறேன்
ஒடுங்கிய உயிர் மீளும்படியாய்
ஒரு முத்தமிடுங்கள்
நீங்களே என் நித்திய கடவுளென
குறிப்பெழுதி வைப்பதில்
எனக்கொரு சங்கடமுமில்லை
- க.உதயகுமார்