கீற்றில் தேட...

முந்திரிகள் பழுத்திருக்கின்றன
அன்று நாம் அலைந்து திரிந்த
முந்திரிக் காட்டில்...
முட்டியின் சிராய்ப்புக்கும்
முதுகின் கொப்பளத்திற்கும்
வெயிலை உணவாக்கி
மேல்சட்டை இல்லாமல் நாம்
அலைந்த முந்திரிக்காட்டில்
முந்திரிகள் பழுத்திருக்கின்றன
மஞ்சளும் சிவப்புமாக

ஒன்றை வாயில் கடித்து உறிஞ்சிக்கொண்டு
இன்னொன்றை பிழிந்து உடலெங்கும் பூத்திருந்த
வேர்க்குருவில் தேய்த்துக் கொண்டு
எஞ்சியவற்றை அரிந்து நாம்
உப்புப் போட்டு குலுக்கி வைத்த
அந்த முந்திரிக் காட்டில்
முந்திரிகள் பழுத்திருக்கின்றன

குடை போன்று கவிழ்ந்து கிடந்த
மரத்தின் நிழலில் குடில் அமைத்து
கோடையில் தோழர்களுடன் கூடி
மகிழ்ந்த அந்த முந்திரி மரத்தில்
அன்று நாம் விட்டு வந்த
தொரட்டியானது இன்னும் அப்படியே
தொங்கிக் கொண்டிருக்கிறது நமக்காக

வாழ்வில் தடம் மாறிச் சென்ற நீயும்
தொலைவே இடம் மாறி வந்த நானும்
மீண்டு திரும்பிச் செல்வோம்
என் கனவின் ஊடே
முந்திரிகள் பழுத்திருக்கின்றன நமக்காக
மஞ்சளும் சிவப்புமாக

- அருண் காந்தி(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)