நித்தம் நித்தம் நினைக்கும் போதும்
நெஞ்சம் துடிக்கிறது -உன்
நிழற்படம் காணும் பொழு தெல்லாம்
நொறுங்கிப் போகிறது.
புறம் பாடித் திரிந்த தமிழனின்
புதல்வன் இன்று களத்தில்
விழுப்புண் தாங்கிக் கிடந்தது
வீரத்தின் விளைநிலமாம்.
கண்ணை மூடி துயில நினைத்தாலும்
கண்ணிமையில் உன்னுருவம் - வாழ்வின்
ஆயிரம் கனவுகள் தாண்டி
அந்த நிமிடம் என்ன நினைத்தாயோ
என் மகனைப் பார்க்கும் பொழுதெல்லாம்
உன் உருவம் தானே விரிகிறது - அவனை
வாரி யணைத்துக் கொள்கிறேன் ,
வக்கற்ற தமிழ்ப்  பிள்ளை நான்.
ஆயிரமாயிரம் பிள்ளைகள் விதையாயினர்
அந்த நிலத்தில் நாதியற்று - ஆயினும்
உன் மரணத்தை மட்டும்  ஏனோ
மனம் செரிக்க மறுக்கிறது.
விதையாய் வீழ்ந்தது என்றும்
வீணாய்ப் போகுமோ - நம்
இனம் அழித்தவனின் கொடி வீழும்
குலம் அழியுமிது சத்தியம்.

Pin It