யாருக்காக காத்திருக்கிறீர்கள்
அவர்கள் வருவார்களா
இரவு பகல் கடந்து நட்சத்திரக்கள் பிரபஞ்சவெளிகளை கடந்து
சூரியவயல்களை கடந்து
இந்த சாலையில் கடைசியாக எந்த மனிதன் போனான்
அந்த மனிதன் இன்னும் திரும்பி வராதபோது
நீங்கள் யாருக்காக காத்திருக்கிறீர்கள்
இந்த உலகம் அவ்வளவு பாதுகாப்பானதல்ல
வீடு சிறையாக இருக்கும் போது
உங்களால் என்னதான் செய்ய முடியும்
எங்குதான் செல்ல முடியும்
புற உலகம் தன் உதடுகளை மூடி வைத்திருக்கிறது
புனித நூல்கள் தன் சன்னல்களை மூடிவிட்டன
இறை வசனங்களும் ஒரு பெண்ணை கொலையிலிருந்து காப்பாற்றவில்லை
நீங்கள் யாருக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்
உடம்பில் பொய்யாக தொங்கிக் கொண்டிருக்கும்
சொற்களை உதறுங்கள்
அவை பொய்யின் உதடுகளால் சொல்லப்பட்டவை
இந்த அறை இந்த தெரு இந்த நாடு
இந்த உலகம் யாருக்காக வேண்டுமானாலும் இருக்கலாம்
உரிமை கோருகிறவர்கள் சண்டையிடட்டும்
நீங்கள் ஒதுங்கி நில்லுங்கள்
யார் ஜெயித்தாலும் அவர்களுக்கு நீங்கள் அடிமைதான்
பொய்யான தோற்றத்திலிருந்து வெளியேறுங்கள்
பொய்யான சொற்களை தூர எறிங்கள்
பிரார்த்தனையின் சொற்களை வீசியெறியுங்கள்
எப்போதும் நிறைவேற்றப்படாத பிரார்த்தனைகள் எதற்காக
இன்னும் மதத்திற்குள் என்னதான் செய்கிறீர்கள்
உங்களை விடுவிக்க யார் வருவார்கள்
உங்களை நீங்களே விடுவிக்க வராத போது...
கீற்றில் தேட...
தேவதூதர்களுக்காக காத்திருத்தல்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்