உனக்கேத் தெரியாத ஒரு பகற்பொழுதில்
உனதறைக்குள் நுழைந்து
உன்னைப் பற்றிய தரவுகளை சேகரித்தேன்
புத்தக வாசிப்பிற்குள் ஒன்றிப் போகிற
உனது சிந்தனைகளை சொல்லிச் சொல்லி அழுது புலம்பியது
அலமாரியில் குறுக்கும் நெடுக்குமாய்
விரித்துப் போட்ட நூற்குவியல்கள்
நூற்குவியல்களுக்கிடையே மலர்ந்து கிடந்தது
தூரமாய் இறுத்திவிட முடியா இரகசிய பயணமெனும் நாட்குறிப்பேடு
உன்னுடனான பயணத்தின் போது நாம்
பேசிச்சிரித்த நிகழ்வுகளையும் பேசிடாத மௌனங்களையும்
கடந்து போன காட்டுவெளிப் பாதைகளையும்
நனைந்து விரைந்த மழைச்சாரலையும்
வெயில் தாளாது நிழல் தேடி அலைந்த மரத்தடிகளையும்
உன்மடி சாய்ந்து படுத்துறங்கிய சிறுபிள்ளைதனத்தையும்
எனக்கேத் தெரியாமல் உன்னருகில் நான் பட்ட சலனத்தையும்
இதழ் சிவக்க பகிர்ந்தளித்த முத்தங்களையும்
தேர்வெழுதச் செல்லும் எனக்காக வராத காய்ச்சலை வந்ததாய் கூறி
விடுமுறை சொல்லி வகுப்பெடுத்த முன் தயாரிப்புகளையும்
இன்னும் இன்னும் எத்தனை நகர்வுகளை பதிவுகளாய் குறிப்பெடுத்திருக்கிறாய்
வாசிக்க வாசிக்க உன் மீதான நேசிப்பின் ஆழம்
எனக்குள்ளே பிரளயமாய் வேர்விட ஆரம்பித்தது
அச்சம் மடம் நாணம் மறுத்து
சகமனுசியாய் பகுத்தறிவோடு நடைபயில கற்றுகொடுக்கிறது
உந்தன் இடைவிடாத நேசிப்பு
- வழக்கறிஞர் நீதிமலர்