பொது இடங்களிலும்
தேசிய நெடுஞ்சாலையிலும்
பொது சிறுநீர்க் கழிப்பிடங்கள்
இல்லாததைப்பற்றி நான் கவலைப்பட்டதில்லை
ஏனென்றால் நான் ஒரு ஆண்.
மூன்றே அடி உயரமுள்ள கட்டிடங்களில் கூட
படிக்கட்டுகள் இருப்பதைப் பற்றி
நான் கவலைப்பட்டதில்லை
ஏனென்றால் எனக்கு கால்கள் நன்றாக இருக்கின்றன.
ஒருவரை சொட்டையன் என்றோ கூளையன் என்றோ
அடையாளம் சொல்லும்போது எனக்கு மனது வலித்ததில்லை
ஏனென்றால் நான் உயரமாக இருக்கிறேன்.
தலையில் முடி வைத்திருக்கிறேன்.
அந்த சேரிப்பசங்க எல்லாம் இப்படித்தான்
என்ற வார்த்தைகளைக் கேட்கிறபோது
கூனிக் குறுகியதில்லை
ஏனென்றால் நான் ஊரில் குடியிருக்கிறேன்.
- நீலவேந்தன்