நீ ஒளித்து வைத்திருந்த உன் கழிவுகளை
குடிபோதையின் பின் கதவுகள் திறந்து விட்டன
இன்று பிற்பகல் முழுவதும் நீ எத்தனையோ முயன்றும்
கழிவுகளின் நாற்றத்தை துரத்த முடியவில்லை
நீ எடுத்த வாந்தியின் சித்திரத்தை விடவும்
மிக மோசமாயிருந்தது கழிவுகளின் வரைபடம்
சமாதானம் சொல்லியே
சொற்களின் மலை தீர்ந்து போனது
உன்னிடம் எதுவுமில்லை வெற்று மெளனத்தைத் தவிர
ஒரே கோப்பையில்
அத்தனை வருடங்களையும் நிரப்பி குடித்து விட்டாய்
நீ தூக்கி எறிந்ததாக சொல்லப்பட்ட
எல்லா வர்ணங்களும் அன்பின் உரையாடல்களுக்கு
தீயிடுவதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்...
- கோசின்ரா