நள்ளிரவு கடக்கும் நேரம்
"உறங்கப் போகிறேன்" என்கிறாய்
குறுந்தகவல் வழியாக..!

"கனவில் ஒரு நடை
வந்து விட்டுப் போ..!"
என்கிறேன்.

நிஜத்திற்கு ஆசைப்படும்
நீயோ கனவில்
வர மறுத்து சிணுங்குகிறாய்..!

மயிலிறகால் வருடும்
உன் நினைவுகளின் கூட்டம்
மலையாய் கனக்கிறது..!

நீ வந்து சேரும் வேளை
மலைக்கும் நினைவுகள்
மேகக்கூட்டமாய் மிதக்கிறது..!

புயல் கடக்கும் போது
பெய்யும் பெருமழையைப் போல
தென்றல் தீண்டும் வேளை
பொழிகிறது காதல் மழை..!

ஆண் பெண் என்னும்
வண்ணங்கள் கரைகிறது.
அன்பை
உடுத்திக் கொள்கின்றன
நிர்வாணங்கள்..!

ஆதாமுக்கும் ஏவாளுக்கும்
மறுக்கப்பட்ட கனியை
மன்மதன்
திருடிச் செல்கின்றான்..!

காதலிக்கப் படாமல்
தவறிழைத்தவர்கள்
தண்டிக்கப்படுகிறார்கள்
முத்தங்களால்..!

போர்களால்
அமைதியிழந்த உலகை
மீட்க
பூக்கள் தவங்கிடக்கின்றன..!

ஒரு குழந்தையின்
பாதம் படுவதால்..
ஆசீர்வதிக்கப்படும் பூமிக்காக
காதலர்கள்
கலவி கொள்கிறார்கள்..!

துயில் கொள்ளாத இரவுகளால்
வம்சங்களின் நெசவு
நெய்யப்படுகிறது..!

பெளர்ணமிகளும் நட்சத்திரங்களும்
பார்த்துக் கொண்டிருக்கும்
இரவுகள் அழகானவை..!

வண்ணத்துப் பூச்சியின்
சிறகுகளிடம்
மென்மையைக் கடன் வாங்காத
மனிதக்கூட்டம்
வன்முறையில் அழிந்து போகும்..!

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.