காற்றின் இலைகளோடு பேசுகிறவன்
குழந்தையின் அழுகை மீது சாக்கைப் போட்டு மூடினான்
அவனுக்கு இந்த மண்ணில் பிடிக்காத அன்றைய
நான்கு வார்த்தைகள் அழுகை, துயரம், காயம், வலி
வார்த்தைகளை அவ்வப்போது மாற்றிக் கொண்டேயிருப்பான்
அவன் பூனைகளை நேசிக்கிறவன்
ஈக்களின் வைத்திய செலவுக்காக தன் சம்பாத்தியத்தை இழந்தவன்
எப்போதும் வெளிகளோடு பேசிக்கொண்டிருப்பான்
அவனுக்கு பிடிக்காமல் போன இன்றைய வார்தைகள்
மனிதன், இனம், போராட்டம், உரிமை
அவனை கனவிலிருந்து தினமும் கூட்டிக் கொண்டு போவார்கள்
அவனது படுக்கையை ஒரு பறவை மீது ஏற்றியிருந்தான்
அடிக்கடி அவன் சப்பாத்திக் கள்ளியோடு திரிவதை பார்த்திருக்கிறார்கள்
குளிர்ந்த கடற்செடிகளோடு மணல்வெளியில் மணலாக கிடப்பான்
அவன் உயிரோடிருப்பதை அவனுக்கு யாராவது சொல்ல வேண்டும்
அவனுக்கு எப்போதும் பிடிக்காத வார்த்தைகள்
சமூகஅக்கறை, ரத்தம், பிரச்சாரம், புரட்சி
அவனுக்கு எப்போதும் பிடித்த வார்த்தைகள்
கடவுள், மது, கோப்பை, உதடுகள்.
- கோசின்ரா