உயிருள்ள ஒரேயொரு தெய்வத்தையாவது அனுப்பும் கிரகம்
இந்த பரந்த வெளியில் எங்கேனும் இருக்கிறதா
ஆயிரம் கோடி கண்களால் பார்க்கப்பட்ட துயரத்தை
தின்று விழுங்கக்கூடிய இறைவன் பால்வீதியில் எங்கேயிருக்கின்றான்
நிலவொளியும் நட்சத்திரங்களும் பார்க்க
கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆன்மா
இந்த சூரியக் குடும்பத்தில் எங்கே சுற்றிக்கொண்டிருக்கும்
எல்லா யுகங்களிலும் உச்சரிக்கப்பட்ட மந்திரங்கள்
எங்கே போய் ஒளிந்துகொண்டன
இத்தனை காலம் பாடப்பட்ட பிரார்த்தனைகள்
இந்த அலைகின்ற உலகில் எங்கே நின்று கொண்டிருக்கும்
ஒரு சிறிய நம்பிக்கையைக் கூட காப்பாற்றாத இறந்த காலத்தை
எங்கே கொண்டு போடமுடியும்
இன்னும் எல்லா நொடிகளிலும் கேட்டுக்கொண்டிருக்கும்
அழுகையின் சத்தங்களை மெல்லிய விசும்பல்களை
எந்த கிரகத்தில் கொட்டுவது
எதிரே வருகிறவன் நவீன இசையில் இசைக்கப்பட்ட
புதிய பக்தி பாடலை பாடிக்கொண்டே போகிறான்
எத்தனை கோடி பேர்கள் இது போல் கடந்து போயிருக்கிறார்கள்
புதிதாக சிரித்துக்கொண்டே
வரும் மழலைகளுக்கு என்ன நம்பிக்கையைத் தருவது
விடை தெரியாத கேள்விகளுக்கு பதிலளிக்க
எல்லாம் தெரிந்தவன் எப்போது வருவான்
- கோசின்ரா