கீற்றில் தேட...

புயல்களிடம் எப்படி தப்பிப்பது என்று
பாடம் நடத்தியது புல்வெளி
புல்வெளியின் உரையாடலைக் கேட்க
அதன் அருகே மண்டியிட்டு அமர்வாதென யோசித்த மரங்கள்
புயலின் வேட்டையில் வேரோடு சாய்ந்து விட்டன.
தீராத வாழ்வென்றின் குரலாகயிருந்த கற்களை
புயல் நகர்த்தி விட்டிருந்தது
தசைகளற்றுக் கிடந்த கடலின் முடியை
கொத்தாகத் தூக்கி கரையில் போட்டது புயலின் கரமொன்று
தப்பித்தலின் சாகசம் அறிந்த புற்கள்
வாழ்வை உறிஞ்சி வளர்ந்தன
புயலின் வாழ்வு நிரந்தரமல்ல
அதை யாரும் கொல்லத் தேவையில்லை
தானே தற்கொலை செய்து கொள்ளும் பிராணி அது
ஆனால் அது ஒழுங்கின் வரிசையை
ஒழுங்கற்றவையாக்கும் கரங்களுடையது
ஒடிந்த மரங்களும், இடுப்பொடிந்த விளக்கு கம்பங்களும்,
தலையை மழித்த கூரைகளும்,
ஒரு பக்கத்தையிழந்த சுவர்களுமாயிருக்கும் அது நடந்து போன தடம்.
புயல் ஓடிவிட்டது தன் பிரேதத்தை தானே தூக்கிக் கொண்டு
அதன் உலராத வாசனை அடைத்துக் கொண்டிருக்கிறது
மீளமுடியாத துயரமாய்.