ஏற்றத் தாழ்வைக் காணும் மனிதருள்
மாற்றம் வேண்டும் உயர்ந்தோர் உண்டு
உயர்ந்தோர் தாங்கள் தோன்றிய மண்ணில்
மயங்கா மக்களின் துணையினைத் திரட்டி
விடுதலை உணர்வை வளர்ப்பது மரபே
ஒடுக்கலை எதிர்க்கும் வீரர் தம்முள்
தம்மண் அல்லாது எதிரி வாழும்
அவன்ஊர் சென்று ஒடுக்கலை எதிர்த்த
குவலயம் புகழும் சேகு வாராவின்
அறமும் வீரமும் சிறப்புடைத் தன்றோ

((தாம் வாழும் சமூகத்தில் உள்ள) ஏற்றத் தாழ்வுகளைக் காணும் மனிதர்களுள், அதை மாற்ற வேண்டும் என்று எண்ணும் உயர்ந்தோர்கள் இருக்கவே செய்கின்றனர். அவர்கள் தாங்கள் தோன்றிய தேசத்தில் உள்ள வீர மக்களை ஒன்று திரட்டி விடுதலை உணர்வை வளர்ப்பது வழக்கமான செயலே ஆகும். (ஆனால்) தம் தேசம் அல்லாது (விடுதலை உணர்வுக்கு எதிரான) எதிரிகள் வாழும் தேசங்களுக்கு எல்லாம் சென்று கொடுமைகளை எதிர்த்த, இவ்வுலகம் புகழும் சே குவாராவின் அறமும் வீரமும் சிறப்பு உடையது அன்றோ?)
 
- இராமியா