கீற்றில் தேட...

பல முறை நிழல் ஒத்திகைகள் பார்த்தாயிற்று..
நண்பர்களின் பரிந்துரைகளுக்கோ பஞ்சமே இல்லை.
ஒன்றிற்கு மற்றொன்று மேம்பட்டதாகத் தெரிந்தாலும்
நமக்குச் சாதகமான பதிலை எதிர்பார்த்தே
காதலை முன்மொழிய வேண்டியிருக்கிறது
பல தருணங்களில்.
.
kiss_on_handதினம் ஒரு ரோஜா மலர் கொடுத்திருந்தால்....
சலிப்பூட்டும் நாடகப்பாணி என்று
அவள் முகம் சுளித்திருப்பாள்.
 
விலையுயர்ந்த கவித்துவமான பரிசுடன்
என் காதலைக் கூறியிருந்தால்,
பற்றாக்குறை பட்ஜெட் முதல் வாரத்திலேயே
பல்லைக் காட்டி என்னை பயமுறுத்தி இருக்கும்.
 
பூங்காவின் மூலையில் இருக்கும்
காய்ந்த மரப் பொந்தில்
என் காதல் குறிப்பை ஒளித்து வைத்து
கடிதம் இருக்கும் இடத்தை
விடுகதைகளாக முடிச்சவிழ்க்கும்
யுக்தியை ஒரு வேளை முயற்சித்திருந்தால்......
பொறுமையை மீறியபடிக்கு
சலிப்பூட்டும் விளையாட்டென்று
அவள் புறக்கணித்திருப்பாள.
காதல் கவிதை ஒன்றினை கொடுத்திருந்தால்,
நன்றாக இருக்கிறதென்று பாராட்டி
உடனே யார் கவிதையிது
என்றும் கேட்டிருப்பாள்.
 
நாங்கள் இருவரும் கடற்கரையில்
ஒன்றாகக் கால் நனைத்தபோது
எடுத்த புகைப்படத்தை ஒரு குறிப்புடன்
அவளிடம் கொடுத்திருந்தால்,
நல்ல புகைப்படம் எப்படி எடுப்பதென்று
ஒரு வகுப்பே எடுத்திருப்பாள்.

கடற்கரை மணலில் என் காதலை
எழுதிக் காட்டி இருந்தால்...
துடுக்கான குறும்பலை ஒன்று
என் பதிவை அழிக்கும் வரை காத்திருந்து
கடல் மேல் காதலா என்று
அவள் கைகொட்டிச் சிரித்திருப்பாள்.
 
எவ்வளவோ திட்டமிட்டு
என் காதலை கூற நினைத்தாலும்
விரல்கள் உரசும் தற்காலிக நெருக்கத்தில்
அடிவானத்தில் மறைந்த ஆதவனைத் தேடி
நாங்கள் இருவரும் இணைந்து பயணிக்கும் போது
அவளின் விரல் பற்றி முத்தமிட
முடிவிற்கு வருகிறது ஒரு காதல் போராட்டம்
அவளின் ஒரே ஒரு ஒப்புதல் புன்னகையால்.
 
- பிரேம பிரபா