உனக்கான என் கவிதைக் குறிப்பில்
நான் நமக்கான இரகசியங்களை
பதிய வைத்திருக்கிறேன்
கண்டும் காணாமல் கண்ணசைத்துப் போன
கல்லூரிக் கனவுகள்
வெளிப்படையாய் சொல்லிவிட்டுப்போன
காதல் உரையாடல்கள்
முதன் முதலாய் நீ கொடுத்தனுப்பிய
கவிதை நூல்கள்
சக நண்பர்களிடத்தில் எனை தோழியென
அறிமுகம் செய்துவைத்த பொய்யுரைகள்
யாருக்கும் தெரியாமல் உன் கை கோர்த்து
பயணம் செய்த கால்த்தடங்கள்
பிறந்த நாள் பரிசாக
தலையில் வைத்துவிட்ட மல்லிகை மொட்டுகள்
போய் வருகிறேன் என்ற பிறகும்
உன்னருகில் நின்று அடம்பிடித்த நாழிகைகள்
நேரம் மறந்தும் விடிய விடிய பேசிச்சிரித்த
அலைபேசி உரையாடல்கள்
உனக்கும் எனக்குமிடையே காரணமற்று
உரசி கொண்ட ஊடல்கள்
இன்னும் இன்னும் நீளமாகக்கூடும்…
உனக்கும் எனக்குமான இரகஷ்யகோப்புகள்
அத்துணை இரகசியங்களையும்…
வெளிப்படையாய் பதிவுசெய்து போகிறேன்
உனக்கான என் கவிதைக் குறிப்பில்…
- வழக்கறிஞர் நீதிமலர்