கீற்றில் தேட...

அவரவரும் தம்விருப்பம்போல்
சுடச்சுட பருகியதுபோக
எஞ்சியிருந்த கடைசித்துளிச் சூரியனை
பள்ளியிலிருந்து
சக்கையாய்த் திரும்பிய பிஞ்சுச்சிறுமி
எக்கித் தொட்டுப்
பொட்டிட்டுக்கொண்டதும்
குதூகலமாக
விளையாட வந்தது
அதுவரை யாரிடமும் முகம்காட்டாமல்
ஒளிந்திருந்த வட்டநிலவு.
நிரந்தரமாய் இருண்டு கிடந்த வீதி
தற்காலிகமாய் மீண்டும் ஒளிர்ந்ததும்
தொலைக்காட்சி அம்மாக்கள் போட்ட கூப்பாட்டில்
மயானமானது பிள்ளைகளின் மைதானம்
முதுகு வலிக்க வலிக்க தரப்பட்ட பள்ளிப்பாடம்
இப்போது அச்சிறுமியை மெல்ல
விழுங்கிக் கொண்டிருந்தது
ஒரு முரட்டு மலைப்பாம்பாக.

- மணி.கணேசன், மன்னார்குடி-614001.