ஒரு புகையென எழும்பி
நிகழ்காலத்தைத்
தெளிவற்றதாக்கிவிடுகிறது
உனது சந்தேகம்.
தோற்றுத் திரும்புகின்றன
உன் பிடிவாதத்தில்
எனது பதில்கள்...
மூன்றாம் காலோடு நொண்டியபடி.
வெல்லமுடியவில்லை என்பதால்
வீட்டுக்குத் திரும்பும் என் வார்த்தைகளை
குரூரப் புன்னகையோடு வழியனுப்புகின்றது
உன் வன்மம்.
என்மேல் நீ எறிந்த தீக்கங்குகளை
அகழ்ந்தெடுக்கிறேன்...
நம்மிடமிருந்து தூர எறிவதற்காக.
இருந்தாலும்-
நிகழ்ந்துவிட்ட காயங்களின் வலியில்
முனகிப் புரள்கிறது எனது வேர்...
ஒவ்வொருமுறையும்.
நீ கசங்கி என் மேல் உதிர்கையில்.