பிரிதல் குறித்த காரணங்களை
நாம் இருவரும்
அதி முனைப்புடன் பட்டியலிட
மனக் கசப்பே வியாபித்திருக்கிறது
நமக்கான பொழுதுகளில்.
சுவாச நெருக்கத்தில்
பகிர்ந்துகொண்ட முத்தங்கள்
ஆழ்கடலில் முகவரியற்று
தொலைந்தும் போனது.
பிரிந்து விடலாம் என்று தீர்மானித்த
அந்த நொடிப் பொழுதிலேயே
பங்கிட ஆரம்பிக்கிறோம்
அவரவர் உரிமைகளை.
நம் நெருக்கமான பார்வைகளின்
பதியத்தில் வளர்ந்த
மொட்டைமாடி முழு நிலவையும்
உளமார்ந்து பகிர்ந்து கொண்ட
நம்பிக்கை முத்தங்களையும்
யார் கணக்கில் சேர்ப்பது?
- பிரேம பிரபா