ஊரெங்கும் கால்பெருக்கி
அடவெடுத்து அலைகிறது
பார்ப்பனீயத்தின் கொடுவாள்கள்.
ஊர் சேரியென
சாதி வருணப்படிநிலையில்
பிரித்து வைக்கப்பட்ட மனித வாழிடங்கள்
மலத்தையும் பிணத்தையும் இழிவென ஒதுக்கி
மனுவேத கோட்பாட்டில் நிலைநிறுத்திய
சாதியக் குலத்தொழில்கள்
புனிதம் தீட்டென
புரோகிதப் பண்பாட்டில் பூநூலிட்டு
ஒதுக்கித் தள்ளப்பட்ட மனித உறவுகள்
ஸ்வாக வெனும் ஒற்றைச் சொல்லில்
உருச்சிதைந்து திசையிழந்து நிற்கிறது
பூர்வீகக்குடிகளின் விழுமியங்கள்
சமூக வெளியெங்கிலும் பார்ப்பனீயம் கக்கிப்போன
தீண்டாமையின் தீப்பிளம்பு
திகுதிகுவெனப் பரவி எரித்துக் கொண்டிருக்கிறது
மனிதநேயத்தையும் மானுட விடுதலையும்
சாதி தீண்டாமை வன்மத்தில்
வெட்டியெறியப்பட்ட சேரி சதைத்துண்டங்கள்
தலைமுறை கோபத்தோடு
பிசாசாய் அலைகிறது
பிய்த்தெறியப்பட்ட வெளியில்
ஆதிக்க சூழ்ச்சிதனை
வேரோடு வெட்டியெறிந்திட...
- நீதிமலர், வழக்கறிஞர்