கருத்த தேகமொன்று
கால்களில் நெஞ்சுச் சதைமுட்ட
கைகள் பின்னியபடி
ஆடைகளைந்த மேனியோடு சுருண்டு கிடப்பதை
கண்டும் காணாதது போல்
பயணிக்கிறீர்கள் உங்கள் போக்கில்
பாம்புகளும், பூரான்களும்
தேள்களும் கூடவே
என்னிடமிருந்து எதையெல்லாம்
தனெக்கென பெறமுடியுமென நினைத்திருந்த
மிருகயினங்களும் கடித்துக் குதறியதில்
குருதியும் மண்ணும் இரண்டறக் கலக்க
மயங்கிக் கிடக்கிறேன்
ஆயினும்,
கொஞ்சம் காய்ந்த குச்சிகளும்
கற்களும்
கூடவே,
தீமூட்டும் சூட்சமும்
எஞ்சியிருக்கின்றன என்னிடம்.
- பாரி மைந்தன்