கீற்றில் தேட...

யாருக்கேனும் தெரியுமா
இந்த வழியாக கடவுள் எப்போது வருவாரென்று
வழி தவறிய ஒரு பறவைக்குஞ்சு காத்துக் கொண்டிருக்கிறது
தன் தாயிடம் சேருவதற்கு
துப்பாக்கிச் சத்தம் கேட்டதும்
எல்லா பறவைகளும் பறந்து விட்டன
எப்படியோ வழிதவறி விட்டது
அதற்கு எங்கே போக வேண்டுமென்று தெரியவில்லை
தன் தாய் மொழியை சரியாக பேசத் தெரியவில்லை
வீடெங்கிருக்கிறதென்று சொல்லத் தெரியவில்லை
அது எல்லா மரங்களையும் காட்டிக் கொண்டிருக்கிறது
அழுது கொண்டிருக்கிறது
அதன் இலக்கு தாயிடம் சேர வேண்டுமென்பதே
என் ஆறுதல் மேலும் பயத்தை உருவாக்குகிறது
பயம் இருட்டைப் போல் அப்பிக் கொள்கிறது
யுத்தமிடுகிறவர்கள் இந்த பூமியை உடைத்து
இன்னொரு கிரகம் செய்யமுடியாத போது
ஏன் யுத்தமிடுகிறார்கள்
அந்தப் பறவைக்குஞ்சு காத்துக் கொண்டிருக்கிறது
கடவுள் வருவானென்று
அந்தப் பறவையிடம் பொய் சொல்ல முடியாது
அந்தப் பறவையை என் வீட்டிற்று கூட்டிச் செல்கிறேன்
காட்டுக்குள் அலைந்து கொண்டிருக்கின்றன பறவைகள்
தன் உறவுகளைத் தேடி.