கடவுளுக்கு எதிர் வீட்டில் வசிப்பவனை
ஒரு நாள் எதிர்பாராமல் சந்திக்க நேர்ந்தது
எப்படி இருக்கிறார் கடவுள் என்றேன்
அவரைப் பார்க்கவே முடியவில்லை.
அவரிருக்கும் வீடு சாத்தப்பட்டிருக்கிறது
உள்ளே யாரோ நடமாடுவது போல
சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது.
பகலில் அது இருட்டாகவும் இரவில் அந்த வீடு வெளிச்சமாகவுமிக்கிறது.
அந்தக் கதவு எப்பொழுது திறக்கப்படுகிறது
எப்பொழுது மூடப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாது.
அவர் பிரம்மச்சாரியா, மணமானவரென்றும் தெரியாது
சிலசமயம் பெண் குரல் கேட்கிறது
மூடியே கிடக்கிற வீட்டை யாருமே சந்தேகப்படவில்லையா?
கடவுளின் வீடென்பதால் காவல்துறையும்
அந்தக் கதவை தட்டவில்லை
அரசாசங்கமும் கடவுளின் வீட்டின் மீது கைவைப்பதில்லை
அந்த வீட்டுக்குள் ஒரு மரம் முளைத்துக் கொண்டிருக்கிறது
கடவுள் ஒரு மரமாகி வெளியே வருகிறார்
அந்த வீட்டிலிருந்து ஒரு பறவை பறந்து போகிறது
கடவுள் ஒரு பறவையாகி பூமியைச் சுற்றுகிறார்
அந்த வீட்டிலிருந்து ஒரு பாம்பு வெளியேறுகிறது
கடவுள் பாம்பு வடிவில் பூமியை அளக்கிறார்
அந்த வீடு எப்போதும் பாழடைந்து இருளாகிக் கிடக்கிறது
கடவுள் ஆதியிருளாகி தவமிருக்கிறார்
அந்த வீட்டின் சன்னலிலிருந்து நெளியும்
செடியின் கிளையில் ஒரு பூ பூத்திருக்கிறது
கடவுள் ஒரு பூவாகி மணம் பரப்புகிறார்
அந்த வீட்டுக்குள் இராத்திரிகளில் சலங்கை சத்தம் கேட்கிறதாமே?
கடவுள் நடனமாடுகிறார்
கடவுளை ஒரு எறும்பு தூக்கிக் கொண்டு
போனதாக பேசிக் கொள்கிறார்
கடவுள் எறும்புக்கும் படியளக்கிறார்
அந்த வீட்டிலிருந்தவன் தற்கொலை செய்து கொண்டதாக பேசுகிறார்கள்
கடவுள் தற்கொலை செய்து கொள்கிறான்
கடவுள் பற்றி புதுப்புது புனைவுகள் வந்து கொண்டே இருக்கின்றன...
எல்லா புனைவுகளையும் இழுத்துச் செல்கிறார்கள்
மக்கள் தன் புற்றுக்குள்.
கீற்றில் தேட...
கடவுளுக்கு எதிர் வீட்டில் வசிப்பவன்
- விவரங்கள்
- கோசின்ரா
- பிரிவு: கவிதைகள்