உடும்பு உரித்து அன்ன என்புஎழு மருங்கின்
கடும்பின் கடும்பசி களையுநர்க் காணாது,
சில்செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து,
ஈங்குஎவன் செய்தியோ தோழா? சந்தைமுறையில்
உலகை இயக்கும்அரசுள்ள வரையில்
வேலை யின்மையும் குறையுடை வேலையும்
நீங்காது காக்கும் என்பதை அறிவாய்
ஓங்கி எழுந்து சந்தையை ஒழித்து
சமதர்ம அரசை நிறுவினாய் எனிலோ
கடும்பசி களையுநர் தேவைப் படாரே

(உடும்பு உரித்தாற் போன்று, எலும்பும் தோலுமாக, உடல் வற்றிப் பசிமிகுந்த சுற்றத்துடனே, 'கேட்போர் பலர்; உணர்ந்து உதவுவோர் சிலரே' என (உழைப்புச் சக்தியைத் தவிர வேறு எதுவும் இல்லாமல்) வருந்திக் கொண்டு இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறாய் தோழனே? சந்தையின் விதிகள் காட்டிய போக்கில் சமூகத்தை நடத்தும் (முதலாளித்துவ) அரசு உள்ள வரையில் வேலையின்மையையும் குறைவான ஊதியம் கொண்ட வேலைகளையும் ஒழிக்காமல் பாதுகாக்கும், (ஆகவே உழைக்கும் மக்களின் வறுமை நிலை ஒழியாது) என்பதை அறிவாய். ஓங்கி எழுந்து சந்தை முறையை ஒழித்துக் கட்டி, சோஷலிச அரசை நிறுவினாய் என்றால் கடும்பசி களையுநர்கள் தேவைப்பட மாட்டார்கள். (அனைவருக்கும் நிரந்தர வேலையும் சீரான ஊதியமும் உறுதியாய்க் கிடைக்கும்))

- இராமியா