வற்கடந் தனிலே உலகே மாள்கையில்
வெற்பென நின்ற உழைப்பவர் நாட்டை
கண்ட ஹெவலட் ஜான்சன் பாதிரி
உண்மைச் சுதந்திரம் அங்கென உரைத்தார்
வஞ்சகத் தாலே புறப்புண் பட்டு
துஞ்சிய உழைப்பவர் அரசின் பின்னால்
ஊடகம் ஆடுது பேயின் ஆட்டம்
ஏடது தனிலே மெய்ம்மை இல்லை
கல்வியுடன் மருத்துவம் தள்ளிப் போவதும்
செல்லிடம் அறியா உழவர் மாள்வதும்
அனைத்திற்கும் மேலாய்ச் சூழ்நிலக் கேடு
சினைகொண்டு வளருது முழுவதும் அழிக்க
நிலைமை நினைக்கையில் கவலை மிஞ்சி
தொலைந்திடும் நாளெண்ணி துயில்வர மறுக்குதே
((1929 ஆம் ஆண்டில்) உலகம் முழுவதும் பஞ்சத்தினால் மக்கள் மாண்டு கொண்டு இருக்கையில், (எந்த விதமான பாதிப்பும் ஏற்படாமல்) மலை போல உறுதியாக இருந்தது சோக்ஷலிச நாடுகளாக இருந்த சோவியத் ஒன்றியம் மட்டுமே. இதனைக் கண்ட (புரொட்டஸ்டன்ட் கிருத்தவ மதத் தலைவரான கான்டெர்பரி ஆர்ச் பிஷப்) ஹெவலட் ஜான்சன் எனும் பாதிரியார் (சோவியத் ஒன்றியத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு) அங்கு தான் உண்மையான சுதந்திரம் உள்ளது என்று எடுத்துரைத்தார். (ஆனால்) வஞ்சகத்தால் புறப் புண்பட்டு சோஷலிச அரசு வீழ்ந்த பின்னால் (உண்மையை எடுத்து உரைக்க வலிமை உள்ளோர் இல்லாத நிலையில்) ஊடகங்கள் (உண்மைகளை எடுத்துரைக்காமல்) பேயாட்டம் ஆடிக் கொண்டு இருக்கின்றன. எந்த ஏட்டிலும் உண்மையைக் காண முடிவதில்லை. கல்வியும் மருத்துவமும் தேவையானோருக்குக் கிடைப்பது இல்லை. போக்கிடம் இல்லாத உழவர்கள் மாண்டு கொண்டு இருக்கின்றனர். அனைத்திற்கும் மேலாக, சூழ்நிலைக் கேடு சினை கொண்டு வளர்ந்து உலகை அழிவுப் பாதையில் அழைத்துச் சென்று கொண்டு இருக்கிறது. இவற்றை எல்லாம் நினைக்கையில் உலகம் அழியும் நாளை எண்ணி, கவலை மிகுந்து, தூக்கம் வர மறுக்கின்றதே!)
- இராமியா