சூரியன் இறங்கி நடந்தது ஊரில்
பூச்சி, புழு தங்காததால்
வானம் மலட்டுப்பேர் கேட்ட காலமது
சாவு நிச்சயிக்கப்பட்டதால் கிணறுகளிலிருந்து
தவளைகள் தாவ எத்தனிக்கவில்லை
பூமியின் படுகை எங்கும் புலால் நெடி
ஆறுகள் சேறு வெடிக்க
வெறிச்சோடிக் கிடந்த ஒரு கோடை.
வேர்கள் கைவிட்டதால் புழுக்கம் மரங்களுக்கு
ஆடைகள் அவிழ்த்து வீசின காற்றில்
பறவைகள் கூடழிந்து ஏதிலியாய் ஏங்கின
வேறொரு தேசமேக விரும்பி
பசியில் அலைந்து
மண்ணின் தோலை உரித்தெடுத்தன மந்தைகள்.
சாகுபடிகள் எல்லாம் சாகும் படிகளாய்
இனி பஞ்சம் பாய் போட்டுறங்கும்
காய்த்த நிலம் கருகி வறண்ட ஒரு காலம்
இன்னும் நீடித்தால் பூமிக்கு மனிதர்கள்
இன்னொரு கிரகத்திலிருந்து இறக்குமதி செய்ய வரும்.
முக்கிய அறிவித்தல்;
சற்றுமுன் கிடைத்த தகவல்களின் படி
வானம் இப்ப மாசமாம்
அப்ப மழை பிறக்கும் ஊர் கூடிபெயர் வைக்க.
- ரோஷான் ஏ.ஜிப்ரி, இலங்கை