சந்தை விதியில் வேலை யில்லோர்
எந்திரத் தனமாய்ப் பெருகுவ தாலே
அடிமைகொள் வலிமை பெற்றிடும் முதலியே
கடிமிகு ஆசை துய்க்கும் முகமாய்
உன்வழி போகையில் புவிவெப்ப உயர்வு
தன்வழி சென்றால் நடப்பதை நினைப்பாய்
பனிமலை உருகி வெள்ளம் பெருக
நனிநிலப் பரப்பு குறுகிப் போமே
வெப்பம் பொறாது அழியும் உயிரில்
தப்பாது உணவுப் பயிரும் சேருமே
முடிவில் உழைக்க மனிதர் இலையேல்
அடிமை கொள்ள எங்கு போவாய்
வருவதை உணர்ந்து ஊழியை மறிக்க
செருக்குடன் சந்தையைப் போற்றுதல் ஒழிப்பாய்
இழைத்திட்ட இழப்பையும் மீட்கும் விதமாய்
உழைப்பவர் அரசை உவப்புடன் ஏற்பாய்
(சந்தைப் பொருளாதார விதியினால் வேலையில்லாதோர் எண்ணிக்கை எந்திரத்தனமாகப் பெருகுவதால் (உழைக்கும் மக்களை) அடிமை கொள்ளும் வலிமையைப் பெற்றுள்ள முதலாளி வர்க்கமே! அதிகார ஆசையைத் துய்க்கும் முகமாக உன் (சந்தைப் பொருளாதார) வழியில் செல்கையில், புவி வெப்ப உயர்வு (பக்க விளைவாகத்) தன் வழியில் செல்வதால், விளையும் விளைவுகளைப் பற்றி நினைத்துப் பார். (புவி வெப்ப உயர்வினால்) பனிமலை உருகி வெள்ளம் பெருகும். அதனால் பூமியின் நிலப் பரப்பு குறைந்துவிடும். வெப்ப உயர்வு பொறுக்க முடியாமல் பல உயிரினங்கள் அழிந்துவிடும். அப்படி அழியும் உயிரினங்களில் உணவுப் பயிர்களும் இருக்கும். உணவுப் பயிரினங்கள் அழிந்தால் (மனிதர்கள் உட்பட எல்லா உயிரினங்களும் அழிய நேரிடும். மனிதர்கள் அழிந்தால்) உழைப்பவர்களும் அழிவார்கள். உழைப்பதற்கு மனிதர்களே இல்லாமல் போகும் நிலை ஏற்படும் போது நீ யாரை அடிமை கொள்ள முடியும்? வரும் ஆபத்தை உணர்ந்து (புவி வெப்ப உயர்வினால் விளையவிருக்கும்) பிரளயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு (சிறப்பான முறை என்று) செருக்குடன் போற்றிக் கொண்டு இருக்கும் சந்தைப் பொருளாதார முறையை ஒழிப்பாய். ஏற்கனவே நிகழ்ந்து விட்ட இழப்பில் இருந்து மீளும் பொருட்டு உழைப்பவர் அரசான சோஷலிச அரசை உவப்புடன் ஏற்றுக் கொள்வாய்.)
- இராமியா