ஹஜ் சென்ற பாட்ட‌னின்
செம்ம‌றி ஆட்டு குறுந்தாடியை
ம‌ழிப்ப‌த‌ற்கு நாள் குறித்தாயிற்று.
ப‌ர்தா தொலைத்த‌ பேருந்துப் ப‌ய‌ண‌த்தில்
நம் ச‌‌கோத‌ரியை உன் க‌ண்க‌ள்
த‌வ‌ற‌விட்டிருக்க‌க்கூடும்.
குல்லாவைக் க‌ழ‌ற்றிவைத்த‌தில் ஒரு
பெரும்சுமை குறைந்த‌ திருப்தியென‌க்கு
ம‌சூதியின் ந‌வாஸ் தொழுகை‌
அடுத்த‌த் தெருவிற்கு கேட்டிராத‌ப‌டி
த‌ன் ச‌த்த‌த்தைக் குறைத்துக் கொண்ட‌து-
தொலைந்து போன‌ புன்னகையுட‌ன்
ஒரு புத்த‌னை உயிர்ப்பிப்ப‌த‌ற்கு.

சொல்லிக் கொள்ளாமலெழுந்த‌ நம்
இடைவெளியில் ஒரு புத்தன் ஜ‌னிக்க‌ட்டும்.
ஆடைக‌ளைக் க‌ளைந்துவிட்டு வா
குளத்தில் ஒன்றாய் குளிப்ப‌துபோல்
ந‌டிக்க‌வாவது செய்வோம்.
குள‌க்க‌ரையில் ந‌ம் குழ‌ந்தைக‌ளின்
விளையாட்டுத் தொட‌ரவேண்டும்.

-‍ சோமா