சுரண்டும் குழாமை வென்ற பின்னர்
அரசின் ஆணையால் நிலம்பொது வானதே
உழுவிப் பாரை விரட்டி அடித்து
உழுபவர் நிலத்தைக் கைக்கொண் டனரே
புதிதாய்த் தோன்றிய உரிமை நிலையின்
விதிமுறை பழகா உழவர் தாமும்
பழைய விதிபோல் நிலவரி செலுத்தி
உழைப்பைத் தொடர வேண்டினர் லெனினை
சமதர்ம அரசில் நிலம்பொது வெனினும்
தமதுள்ளந் தனிலே களங்கம் இல்லா
உழவரின் நிலையை அறிந்த லெனினும்
பழைய வரிமுறை மீண்டும் கொணர்ந்தார்
அரசின் ஆணைக்கு மாறாய் இருப்பினும்
கரவிலா உழைப்பை மதித்த லெனினை
நன்றிப் பெருக்குடன் வாழ்த்தினர் உழவர்

(சுரண்டும் கூட்டத்தை வென்ற பின்னர் (சோஷலிச அரசை அமைத்து) நிலத்தை அரசுடைமையாக்கி ஆணை பிறப்பிக்கப் பட்டது. அதன் மூலம் (உழைப்பில் ஈடுபடாமல் பிறரை) உழுவிக்க வைத்துக் கொண்டு இருந்தோரை விரட்டி அடித்து விட்டு, உழுபவர்களின் கைகளில் நிலம் வழங்கப்பட்டது. நிலத்தைப் பெற்றுக் கொண்ட உழவர்களால் புதிய (புரட்சிகர) சூழ்நிலையின் விதிகளுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ளத் தெரியாமல், பழைய விதிகளைப் போலவே நிலவரி செலுத்தி என்றும் போல் விவசாயத்தைச் செய்ய லெனினிடம் வேண்டினர். உழவர்கள் (புரட்சிகர நிலைக்குப் பண்படாமல் இருந்தாலும்) உழைக்க வேண்டும் என்ற களங்கம் இல்லா உள்ளத்துடன் இருப்பதை அறிந்து கொண்ட லெனின் உழவர்களைப் பொறுத்த மட்டில் பழைய நிலவரி முறையை அமல்படுத்தினார். இது நிலம் பற்றிய அரசாணைக்கு மாறாக இருந்தாலும் (உழவர்களின்) கள்ளமில்லா உழைப்பை மதித்து (தங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட) லெனினை உழவர்கள் நன்றிப் பெருக்குடன் வாழ்த்தினார்கள்.)

- இராமியா